தமிழ்நாடு
“9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்” ஏன்? – முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்

தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த கல்வியாண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் என்னவென்பது குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவிக்கையில், ‘கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் வைட்டமின் மற்றும் புத்துணர்வு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டு முழுவதும் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தார்கள். மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதன் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.
மேலும் இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020 – 21 கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் மதிப்பீடுகள் எப்படி கணக்கிடப்படும் என்பது குறித்து அரசு விரைவில் தகவல் வெளியிடும்’ என்று தெரிவித்துள்ளார்.













