தமிழ்நாடு
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா? – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் தற்போது மழைக் காலம் இல்லை என்கிற போதிலும், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழைப் பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலும், தென்காசியின் சிவகிரியிலும் தலா 7 சென்டி மீட்டரை மழைப் பதிவாகியுள்ளது.




















