இந்தியா
ஆக்சிஜன் அளவு அதிகரிக்க எலுமிச்சை சாறு செலுத்திய ஆசிரியர் பலி!

உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காக மூக்கு வழியே எலுமிச்சைச்சாறு செலுத்திய ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூக்கு வழியாக எலுமிச்சை சாறு விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என கர்நாடக மாநில முன்னாள் எம்பியும் தொழிலதிபருமான விஜய் சங்கேஷ்வர் என்பவர் சமீபத்தில் கூறியிருந்தார். இவர் கூறியதற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு செயலை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் ராய்ச்சூர் என்ற பகுதியை சேர்ந்தவர் பசவராஜா என்ற ஆசிரியர் தனது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மூக்கில் எலுமிச்சை சாற்றை செலுத்தியுள்ளார். இதனையடுத்து அவரது உடல் திடீரென மோசமாகி இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பசவராஜ் 43 வயதே ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்ற வதந்தியை நம்பி மூக்கு வழியே எலுமிச்சைசாறு செலுத்தி ஆசிரியர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















