வணிகம்
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அஞ்சல் துறையின் Senior Citizen Savings Scheme – உச்ச வட்டி மற்றும் பாதுகாப்பான முதலீடு!

அஞ்சல் துறை வழியாக வழங்கப்படும் முக்கியமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme – SCSS) செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் பொருளாதார பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு தற்போதைய நிலையில் 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அஞ்சலக சேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வருமானம் வழங்கும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி தொகை ஒவ்வொரு காலாண்டும் உங்கள் சேமிப்பு கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதன் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும். மேலும் விருப்பமிருந்தால் கூடுதல் கால நீட்டிப்பும் செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் சேர 60 வயது நிரம்பியவர்கள் தகுதி பெற்றவர்கள். அதே நேரத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 55 வயதுக்கு பிறகும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் 50 வயதுக்கு பிறகும் இதில் இணையலாம்.
ஒருவேளை இந்தத் திட்டத்திலிருந்து முதல்படியாக வழிமறித்து வெளியேற விரும்பினால் சில அபராத விதிமுறைகள் உள்ளன. முதல் ஆண்டுக்குள் வெளியேறினால் வட்டி கிடையாது. 1 ஆண்டிற்குப் பிறகு, 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறினால் முதலீட்டுத் தொகையில் 1.5% பிடித்தம் செய்யப்படும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறினால் 1% பிடித்தம் விதிக்கப்படும்.
இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1,41,000 வரை பெற முடியும். அதேபோல் அதிகபட்ச முதலீடான ரூ.30 லட்சம் செலுத்தினால், 5 ஆண்டுகளில் சுமார் ரூ.42,30,000 வரை பெறப்படும்.
ஒரு நிதியாண்டில் கிடைக்கும் வட்டி தொகை ரூ.50,000-ஐ கடந்தால், அதில் TDS (வரி பிடித்தம்) விதிக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் சேருவதற்குத் தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை, பான் கார்டு, 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் மற்றும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு.
மூத்த குடிமக்கள் இந்த பாதுகாப்பான, பயனுள்ள சேமிப்புத் திட்டத்தில் இணைந்து தங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.














