தமிழ்நாடு
ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக தனி தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

#image_title
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவை முன்னவர் துரைமுருகன், சட்டமன்ற பேரவை விதி 92/(vii), 287, 92(vii) ஆகியவற்றில் உள்ள ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து அரசினர் தனித் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென முன் மொழிந்தார். ஆளுநருக்கு எதிரான தீர்மானத்துக்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையின் கதவுகளை மூடி, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு முன்னதாகவே அதிமுகவினர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்ததால் அவர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மேலும் பாஜக உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை. மீதமுள்ள பாஜக உறுப்பினர்களான எம்.ஆர்.காந்தி மற்றும் சி.சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த தீர்மானம் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வர அனுமதித்தார். முன்னதாக தமிழக அரசு அனுப்பியிள்ள 14 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்து காலம் தாழ்த்தி வரும் சூழலில் நிலுவையில் வைத்திருந்தாலே அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என ஆளுநர் கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.