தமிழ்நாடு
கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டேன்: சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ஆளுநருக்கு எதிராக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு ஆளுநர் இடையூறு செய்தால், கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என குறிப்பிட்டார்.

#image_title
தனி தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராக இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறியுள்ளார். ஆளுநர் தினசரி ஒரு கருத்தை தெரிவித்து ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றியுள்ளார். அவர் அரசியல்வாதி போல் பேசுகிறார். சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு ஆளுநர் இடையூறு செய்தால், கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குறிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநில நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை. அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவது என்றும், அதற்கான அறிவுரைகளை ஆளுநருக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என கூறி தீர்மானத்தை கொண்டு வந்தார்.