தமிழ்நாடு
மக்கள் கொண்டாடும் மன்னனை இவ்வாறு பேசியது ஏன்? ரஞ்சித்திடம் நீதிபதி அதிரடி கேள்வி!

ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி மனுதாரர் தரப்பிடம் அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன் என்றார்.
இந்த சூழ்நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா தாமாக முன்வந்து இந்த வழக்குகளை பதிவு செய்தார். இதனால் பா.ரஞ்சித் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவானது. இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இயக்குநர் பா.ரஞ்சித் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது இயக்குநர் ரஞ்சித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களையே என்னுடைய மனுதாரர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பலரும் பல மேடைகளிலும் புத்தகங்களிலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எனது மனுதாரரின் பேச்சு மட்டும் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இதனை கேட்ட நீதிபதி, ஆயிரம் ஆண்டுகள் கழித்து ராஜராஜ சோழன் குறித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? இன்றும் அரசு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அதற்கான நிவாரணங்களை வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக ராஜராஜ சோழனை மட்டும் குறிப்பிடுவது ஏன்? பேசுவதற்குப் பல்வேறு விஷயங்கள் இருக்கும்போது மக்கள் கொண்டாடும் மன்னன் ஒருவனை இவ்வாறு பேசுவது ஏன்? என அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார்.
மேலும் இதுபோன்று பேசுவதை மனுதாரர் தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார். இதனையடுத்து அரசு தரப்பு ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் வரும் 19-ஆம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைத்த நீதிபதி அதுவரை இயக்குநர் ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.


















