தமிழ்நாடு
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் கையெழுத்திடக் கோரி, ஆளுநர் மாளிகை அருகே திமுக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்குச் சட்டமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதை அடுத்து ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குக் கிடைக்கும்.
இந்த அரசாணையில் கையெழுத்திட ஆளுநருக்கு அனுப்பி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இதுவரை கையெழுத்திடப்படவில்லை. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விரைவில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங் விரைவில் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக, ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே, நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும்.
ஆனால் அதில் கையெழுத்திட, மேலும் ஒரு மாதம் வரை காலம் எடுக்கும் என்று ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த தகவல்கள் கூறுகின்றன. அப்படி தாமதமானால் நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவது குறைவாக இருக்கும்.
எனவே ஆளுநர் விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் ஆணையில் கையெழுத்திட வலியுறுத்தி, திமுக சார்பில், ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “அரசுப் பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டுமல்ல, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தையும் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பும் போது எல்லாம், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எதிர்க்கட்சிகள் என்றால் அரசியல் செய்யாமல், அவியலா செய்வார்கள்” எனப் பேசியுள்ளார்.


















