சினிமா
மெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…

மெலேபிசென்ட். காட்டில் வாழும் ஒரு தேவதைக்கும் எதார்த்தமாக சந்திக்கும் ஒரு சிறுவனுக்கு நட்பு உண்டாகிறது. அப்போ காட்டில் வாழும் அந்த தேவதையால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி அந்த தேவதையை கொல்ல முயல்கிறான் அந்த மன்னன். ஆனால், முடியவில்லை. அந்த தேவதையை கொலை செய்பவர்களுக்கு தன் மகளை திருமணம் செய்து வைப்பதுடன் நாட்டையும் தருவதாக அந்த மன்னன் அறிவிக்கிறான். இதற்கிடையில் அந்த சிறுவனுக்கும் தேவதைக்கும் இடையேயான நட்பு காதலாகிறது. நாட்டிற்காக ஆசைப்பட்டு தேவதையைக் கொல்லாமல் அவளது இறக்கைகளை மட்டும் வெட்டி விடுகிறான். மன்னன் மகளையும் திருமணம் செய்து, நாட்டின் ராஜாவும் ஆகிவிடுகிறான். சில நாட்களில் அவனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. துரோகத்தின் துயரத்தில் இருக்கும் தேவதை மெலேபிசென்ட் குழந்தைக்கு ஒரு சாபம் விடுகிறார். அந்த சாபத்தில் இருந்து அந்தப் பெண் எப்படி மீள்கிறார். மெலிபிசெண்ட் தன்னுடைய பழியை எப்படித் தீர்த்துக்கொள்கிறார் என்பதை அழகான பேன்சி கதையாக சொல்லும் படம் தான் 2014ல் வெளியான மெலிபிசெண்ட்.
மெலேபிசென்ட்டாக ஏஞ்சலினா ஜோலி. எப்போதும் தேவதைபோல காட்சி தரும் அவர் படம் முழுவதும் அழகு தேவதையாகவே வலம் வருகிறார். காதலில் உருகுவதாகட்டும், ஏமாற்றப்பட்டு வருந்துவதாகட்டும், மன்னனின் குழந்தைமீது பாசம் கொண்டு அதை காட்டியும் காட்டாமலும் இருப்பதாகட்டும் நடிப்பிலும் தான் ஒரு தேவதை என்பதை நிரூபித்திருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.
மன்னனின் மகளாக வரும் எல்லே பேன்னிங் குட்டி தேவதையாக ஆங்காங்கே கவனம் ஈர்க்கிறார். உண்மை தெரிந்து மெலேபிசெண்ட் மீது கோவம் கொள்ளும் போதும் அவருக்கு நடந்த துரோகம் தெரிந்து தன் அப்பாவை எதிர்க்கும்போது அழகாக தெரிகிறார்.
பேசும் மரங்கள், குட்டி குட்டியாக பறக்கும் தேவதைகள், காக்கையாகவும் இளைஞனாகவும் உரு மாறும் ஒருவன், அழகழகான பூக்கள் என படம் முழுவதும் பேன்சி கொட்டிக் கிடக்கிறது. ஹாலிவுட் மூவிக்களில் இருக்கும் தொழில்நுட்ப நேர்த்தி இந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். மற்றபடி வழக்கமான ஒரு பேன்சி மூவி தான். என்றாலும் காட்சி அமைப்பு, ஏஞ்சலினா நடிப்பு என படம் அட்டகாச அனுபவத்தை தருகிறது.
தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இதைப் படித்துவிட்டு பார்த்துவிடுங்கள். இரண்டாம் பாகத்தையும் பார்த்துவிடுங்கள். 3டியில் நிச்சயமாக நல்ல அனுபவமாக இருக்கும்… ஏஞ்சலினாவை 3டியில் பார்ப்பதும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
முக்கியமான ஒரு விஷயம். இந்தப் படம் சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், விருதுதான் கிடைக்கவில்லை. பெரும் சோகம் தான்… பார்க்கலாம் இந்த முறை…