சினிமா
சோம்பிலேண்ட்-1 விமர்சனம்… அமெரிக்காவின் சோம்பி உலகத்துக்குள் ஒரு சின்ன ரவுண்ட் அடிக்கலாம்…

முழுவதும் சோம்பிகள் நிறைந்த அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருந்து தொலைந்து போன தன்னுடைய குடும்பத்தை தேடும் இளைஞன், தொலைந்த தன்னுடைய நாயைத் தேடித் அலையும் ஒரு நடுத்தர வயது மனிதன், நகரின் ஒரு பகுதியில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல நினைக்கும் சகோதரிகள் இவர்களும் இணைந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் சோம்பி லேண்டை கடந்து தாங்கள் நினைத்ததை முடித்தார்கள் என்பதை கொஞ்சம் நகைச்சுவை, நிறைய ரத்தம் கலந்து சொல்லும் படம் தான் 2009ம் ஆண்டில் வெளியான சோம்பி லேண்ட்.
கொலம்பசாக நவ் யூ சீ மி நாயகன் ஜெஸ்ஸி எய்சென்பர்க், டல்லாஹச்சேவாக ஹாலிவுட்டின் ஆக்சன் கிங் வுட்டி, விச்சிதாவாக அழகி எம்மா வாட்சன், அவரது சகோதரி லிட்டில் ராக்காக அபிகெய்ல் இவர்கள் நால்வர் மட்டும்தான் இந்தப் படம் முழுவதும். இந்தப் படத்தில் வரும் மற்ற அனைவரும் எப்போதும் யாருடைய குரல்வளையை கடித்து, நரம்பை இழுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இவர்கள் மூன்று பேருக்கும் தனித்தனி பிளாஸ் பேக், ஒருவருக்கொருவர் சின்ன சின்னதாக நம்பிக்கை துரோகம், அதில் கொஞ்சம் நகைச்சுவை, நிறைய ரத்தம் எனப் படம் நகர்கிறது.
சோம்பிகளிடம் இருந்து தப்பிக்க இதயத்தில் சுடவேண்டும், ஒருமுறைக்கு இருமுறை சோம்பிகளை கொல்ல வேண்டும், பொது இடங்களில் அதுவும் டாய்லெட்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என வரும் சில விதிகள் 1, 2, 3, 4, 18, 17, 31 என ஏதோ வரிசையில் வருகிறது. எம்மா வாட்சன் பொய் சொல்லி ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் காட்சிகள் என சில இடங்களில் நகைச்சுவை செட் ஆகியிருக்கிறது.
வழக்கமான சோம்பி படம் தான். பெரிய அளவில் எந்தவித ட்விஸ்டும், சுவாரஸ்யமும் இல்லாமல்தான் படம் நகர்கிறது. காட்சிகளிலும் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை. கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் அதிகம். எம்மா வாட்சனுக்கும் ஜெஸ்ஸிக்கும் இடையே இறுதியில் காதல் என அதே பழக்கப்பட்ட காட்சிகள்.
பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அட்வென்சர் மற்றும் ஆக்சன் பட ரசிகர்களை ஓரளவு இந்தப்படம் கவரும். அப்போ எதுக்கு இப்போ இந்த படத்தைப் பற்றி பேசுகிறோம் என்று பார்க்கிறீர்களா… இந்த வாரம் சோம்பி லேண்ட் டபுள் டேப் என்ற இதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. அதற்கான முன்னோட்டம் தான்.