ஆன்மீகம்
மகாளய அமாவாசை 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் சிறந்த நேரம் மற்றும் வழிமுறைகள்!

இந்த ஆண்டு மகாளய அமாவாசை செப்டம்பர் 21, 2025 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது, நம் சந்ததிக்கு ஆசீர்வாதம் மற்றும் நன்மைகளை வழங்கும் என்று சொல்லப்படுகிறது.
மாதந்தோறும் அமாவாசை தினங்கள் வந்தாலும், ஆண்டுதோறும் வரும் ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை மற்றும் தை மாத அமாவாசை தினங்கள் மிகவும் முக்கியமானவை. வழக்கமாக வரும் அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தவறியவர்கள், இந்த மூன்று முக்கிய அமாவாசைகளில் தர்ப்பணம் செய்தால் ஆண்டு முழுவதும் புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் குறையும் என பழமொழி கூறுகிறது. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர் போன்றோர் மகாளயம் செய்து பெரும் நன்மை பெற்றனர் என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது இடம் முக்கியம். ஓடும் நீர் அருகே அல்லது கடற்கரை அருகில் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் காலை 6 மணி முதல் மாலை 1 மணி வரை. ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் அதிகாலை முதல் 7 மணி வரை தர்ப்பணம் செய்வது சிறப்பாகும்.
தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் அன்னதானம் செய்து, பித்ருக்களை வழிபடுவதும் மிகவும் சிறந்தது.


















