இந்தியா
மதுரை எய்ம்ஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா இடையே காரசாரமான விவதாம் நடைபெற்றது. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

#image_title
இன்று மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மதுரை எய்ம்ஸ் போன்று பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு திறக்கப்படாத மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் எத்தனை உள்ளன? என கேள்வி எழுப்பினார். மேலும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பினார்.
டி.ஆர்.பாலுவின் இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, இந்தியாவில் எந்த ஒரு மருத்துவக் கல்லூரியும் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் திறக்கப்படவில்லை என்றார். மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதற்கான பணிகளை மத்திய அரசு முழுமையாக செய்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தை தமிழக எம்பிக்கள் அரசியல் ஆக்கக்கூடாது, இது சுகாதாரம் சார்ந்தது என்றார்.
இதனையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், மதுரை எய்ம்ஸ் தொடர்பான தகவல்களை மத்திய அரசு அவையில் அளிக்க மறுக்கிறது என்று கூறி அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பும் செய்தனர். இந்த விவகாரத்தில் டி.ஆர்.பாலு மற்றும் மன்சுக் மாண்டாவியா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றதால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.