சினிமா
கல்பாக்கம் ஷெட்யூலை முடித்த ‘இந்தியன்2’; அடுத்த ப்ளான் என்ன?

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரக்கூடிய ‘இந்தியன்2’ படக்குழு தற்போது கல்பாக்கம் ஷெட்யூலை முடித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘இந்தியன்2’. கொரோனா உள்ளிட்டப் பல காரணங்களால் இதன் படப்பிடிப்புத் தள்ளிப்போன நிலையில், இப்போது மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கல்பாக்கத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது அது முடிவடைந்துள்ளது.
இதனை அடுத்து படக்குழு தென் ஆப்பிரிக்கா கிளம்ப உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஷெட்யூல் முடிந்ததும் தாய்லாந்து கிளம்புகிறது. வெளிநாடுகளில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த வெளிநாடு படப்பிடிப்பில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்க இருக்கிறார்கள். இந்த சண்டைக்காட்சிகள் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுடைய சினிமா பயணத்தில் முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கும் என்கின்றனர் தகவல் தெரிந்தவர்கள்.
’இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இதில் கமல்ஹாசனின் ‘இந்தியன் தாத்தா’ ப்ளாஷ்பேக் அதிக நேரம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்திற்கு முடித்து, இந்த வருடத்திற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.