செய்திகள்
பிரசாத் ஸ்டூடியோவில் இறுதியாக இளையராஜா – ஒரேயொரு நாள் அனுமதி!

இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அரங்கை, அதன் உரிமையாளர் வேறு பயன்பாட்டுக்கு மாற்றியதால், நிறுவனம் தரப்பிற்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதுதொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டு, போலீசில் அளிக்கப்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், விலை மதிக்க முடியாத இசை குறிப்புகள், கருவிகள், விருதுகள் எல்லாம் தான் பயன்படுத்திய அரங்கில் வைத்திருந்ததாகவும், அதை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
தான் பயன்படுத்திய இடத்தில் ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்றும் இளையராஜா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குப்பையைக் கொட்ட இனி கட்டணம் வசூல்- சென்னை மாநகராட்சி அதிரடி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்கும்படியும், இருதரப்பினரும் சமரசமாக போகும்படியும் கருத்து தெரிவித்தார்.
இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்டூடியோ தரப்பில் மூத்த வக்கீல் அரவிந்த்பாண்டியன், இளையராஜா தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பல ஆண்டுகள் பயன்படுத்தி வந்த அரங்கத்தில் அவரை ஒரு நாள் அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா அங்கு இருக்கலாம்.

தியானம் செய்யலாம். அதேநேரம் தன்னுடைய பொருட்களை எடுத்து விட வேண்டும். 4 மணிக்கு மேல் ஒரு போதும் அங்கு இருக்கக்கூடாது. இளையராஜா அங்கு இருக்கும்போது, வேறு யாரும் அங்கு செல்லக்கூடாது. இருதரப்பினரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடாது. இதற்காக வக்கீல் வி.லட்சுமிநாராயணனை வக்கீல் ஆணையராக நியமிக்கிறேன். இவரிடம்தான் இருதரப்பினரும் பேசிக் கொள்ள வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் முகத்தில் மனுவை தூக்கியெறிந்த திமுக தொண்டர்!
எந்த நாளில் இளையராஜா அங்கு செல்வது என்பது குறித்து இருதரப்பு வக்கீல்களும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். அதற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும். பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு இளையராஜா சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, போலீசில் கொடுத்த புகார்கள் அனைத்தும் முடித்து வைக்கப்படுகிறது” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இத்தனை ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் அந்த குறிப்பிட்ட அறையில் இருந்துதான் இளையராஜா, தனது முக்கால்வாசி பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். அதில் கடைசியாக ஒரே ஒரு நாளில் தியானமும் செய்து பொருட்களையும் எடுத்துச் சென்று விட வேண்டுமா? என்று ரசிகர்கள் சமூக தளங்களில் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களை விமர்சித்து வருகின்றனர்.





















