வணிகம்
EPFO 3.0: இயற்கை சீற்றங்கள், வேலை இழப்பு உள்ளிட்ட வித்ட்ராயல் விதிகளில் முக்கிய மாற்றங்கள் – முழு விவரம்!

EPFO 3.0 சிஸ்டத்தின் கீழ், எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் அமைப்பு (EPFO) பகுதியளவு மற்றும் முழு பண வித்ட்ராயல் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள், சப்ஸ்கிரைபர்களுக்கு பணத்தை விரைவாகவும் எளிமையாகவும் பெற்றுக்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமையில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்ற மத்திய அறங்காவலர் வாரியக் கூட்டத்தில், இந்த மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. EPFO 3.0 விதிகளின் முக்கிய அம்சங்களை கீழே பார்க்கலாம்.
🔹 வேலை இழந்தபோது EPF வித்ட்ராயல்
முன்னதாக வேலை இழந்த ஒரு மாதத்திற்கு பிறகு 75% தொகையும், இரண்டு மாதங்கள் கழித்து மீதமுள்ள 25% தொகையும் வித்ட்ரா செய்ய அனுமதி இருந்தது. தற்போது EPFO 3.0 விதிகளின்படி, வேலை இழந்த உடனேயே 75% EPF தொகையை வித்ட்ரா செய்து கொள்ளலாம். முழு EPF தொகையை வித்ட்ரா செய்ய, தொடர்ந்து 12 மாதங்கள் வேலை இல்லாமல் இருக்க வேண்டும்.
🔹 வேலை இழந்த பின் பென்ஷன் வித்ட்ராயல்
முன்னதாக இரண்டு மாதங்களில் பென்ஷன் வித்ட்ராயல் செய்ய அனுமதி இருந்த நிலையில், புதிய விதிகளின் படி இந்த காத்திருப்பு காலம் 36 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
🔹 நிறுவனம் மூடல் தொடர்பான விதிகள்
நிறுவனம் மூடப்பட்டால், EPF தொகையில் 75% வரை மட்டுமே வித்ட்ரா செய்ய முடியும். மீதமுள்ள 25% தொகை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.
🔹 தொற்றுநோய் / உலகளாவிய அவசர நிலை
கோவிட் போன்ற தொற்றுநோய் சூழலில், EPF தொகையின் 75% அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம் + டியர்னஸ் அலவன்ஸ் தொகை வித்ட்ரா செய்ய அனுமதி தொடர்கிறது. இதற்காக ஒரே மாதிரியான 12 மாத சேவை தகுதி விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🔹 இயற்கை சீற்றங்கள்
EPFO 3.0இன் கீழ், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான பகுதியளவு வித்ட்ராயல் செய்ய குறைந்தபட்ச சேவை காலம் 12 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வித்ட்ராயல் வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
🔹 மருத்துவ சிகிச்சை
மருத்துவ செலவுகளுக்கான வித்ட்ராயல் விதிகளில் மாற்றம் இல்லை. ஆனால், 12 மாத குறைந்தபட்ச சேவை விதி இங்கு பொருந்தும்.
🔹 கல்வி மற்றும் திருமணம்
கல்வி தேவைகளுக்காக சேவைக் காலத்தில் 10 முறை வரை வித்ட்ராயல் செய்யலாம். திருமண செலவுகளுக்காக 5 முறை வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
🔹 வீடு வாங்குதல் / கட்டுதல்
வீடு வாங்க அல்லது கட்டுவதற்கான குறைந்தபட்ச பணி சேவை காலம் 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
🔹 வீட்டு கடன் அடைப்பது
வீட்டு கடன் அடைப்பதற்கான விதிகளில் மாற்றம் இல்லை. ஆனால், டிஜிட்டல் முறையில் விரைவாக வித்ட்ராயல் செய்ய புதிய, எளிமையான செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

















