தமிழ்நாடு
வழிமறித்த பறக்கும் படை: காரை நிறுத்தாமல் சென்ற தினகரன் மீது வழக்கு பதிவு!

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சியினர். அதே நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல கோடி ரூபாய், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களையும் கைப்பற்றி வருகின்றனர்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரை நிறுத்தியபோது அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றதற்காக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 31-ஆம் தேதி அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அயோத்தியாப்பட்டினத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனைக்காக வழிமறித்துள்ளனர்.
ஆனால் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் வாகனங்களை நிறுத்தாமல் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி மணிமேகலை சேலம் வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் நேற்று டிடிவி தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



















