இந்தியா
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் 47 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் மொத்தம் 188 பயணிகள் பயணம் செய்தனர். ஹாங்காங் அடைந்ததும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அதில் 47 பயணிகளுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 25 சதவீதம் பேருக்கு கொரோனா என்ற தகவல் ஹாங்காங் அரசுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் மற்ற பயணிகளுக்கும் கொரோனா பரவி இருக்குமா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு பயணிகள் யாரும் வரவேண்டாம் என இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங் சென்ற 47 பயணிகளுக்கும் கொரோனா என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே ரீதியில் சென்றால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை எந்த நாடும் அனுமதிக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.














