கிரிக்கெட்
சென்னை அணி அபார பந்துவீச்சு: ஐதராபாத்தை வீழ்த்தி 4வது வெற்றி!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
ஐதராபாத் தடுமாற்றம்
ஐதராபாத் அணியில் ஹாரி புரூக், அபிஷேக் ஆகிய இருவரும் இன்னிங்சை தொடங்கினர். புரூக் 18 ரன்கள் மற்றும் அபிஷேக் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். அடுத்து திரிபாதி 21 ரன் விளாசி ஜடேஜா சுழலில் வீழ்ந்தார். கேப்டன் மார்க்ரம் 12 ரன்கள், அகர்வால் 2 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐதராபாத் 13.5 ஓவரில் 95 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. கிளாஸன் 17 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்கள் எடுத்தும் அவுட் ஆனார்கள. ஜான்சென் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை பந்துவீச்சில் ஜடேஜா 3, ஆகாஷ், தீக்ஷனா, பதிரணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னைக்கு 4வது வெற்றி
20 ஓவரில் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியைப் பெற்றது. சென்னை அணித் தரப்பில் டெவான் கான்வே 77 ரன்களும், ருதுராஜ் 35 ரன்களும் விளாசினர். சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில் தனது 4வது வெற்றியை வசப்படுத்தி, புள்ளிப் பட்டியலில் 3 வந்து இடத்திற்கு முன்னேறி உள்ளது.