தமிழ்நாடு
தென் மாவட்டங்களில் கனமழை, சென்னையில் வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 25 முதல் 28 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் குமரி கடலில் வீசும் காற்று காரணமாக இன்று அதாவது மார்ச் 26 முதல் 28 வரை உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மேலும் நீலகிரி கோவை திருப்பூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

















