சினிமா செய்திகள்
தொகுப்பாளர், நடிகர் ஆனந்த கண்ணன் காலமானார். ரசிகர்கள் அதிர்ச்சி

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆனந்த கண்ணன் காலமானார் என்ற செய்தி தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் தொலைக்காட்சி பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 90களில் சன் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். இவர் சிந்துபாத் உள்பட சில சீரியல்களில் நடித்தவர் என்பதும் அந்த சீரியல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் சின்னத் திரை உலகினர் மற்றும் திரையுலகினர் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ’மிகச் சிறந்த நண்பரும் சிறந்த மனிதனாகவும் இருந்த ஆனந்த கண்ணன் இன்று இல்லை, அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும். எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகர் ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பல திரையுலக மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் ஆனந்த கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















