தமிழ்நாடு
கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

பாரதமாதா மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை அவமரியாதையாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்களை அவமரியாதையாக பேசினார்.
மேலும் பாரதமாதாவை இழிவாக பேசியதாகவும், இந்து மத கடவுள்களை அவர் அவமரியாதையாக பேசியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜார்ஜ் பொன்னையா திடீரென தலைமறைவாகியதை அடுத்து அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.
ஜார்ஜ் பொன்னையாவை காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் சற்றுமுன்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதரீதியான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.























