தமிழ்நாடு
‘தேர்தல் என்பது முடிவல்ல…’- முதல் சட்டசபைத் தேர்தல் பற்றி கமல் உருக்கம்

தேர்தல் என்பது முடிவல்ல என்றும், மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் ஒரு ஜனநாயக நம்பிக்கை வாதியாக என் ஆசை.
இந்தத் தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
16 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை. pic.twitter.com/tW6dfNo8lB
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 7, 2021
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்று முன்னகர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பது அதில் முதன்மையானது.
தமிழகத்தைச் சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம்’ என்று தெரிவித்துள்ளார்.





















