தமிழ்நாடு
தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு: இன்று பேச்சுவார்த்தையா?

அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக நேற்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பேச்சுவார்த்தை நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.
அதிமுக தரப்பிலிருந்து 12 தொகுதிகள் மட்டுமே தருவோம் என்று கூறியதாகவும், தேமுதிக தரப்பில் இருந்து 23 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதிகள் வேண்டும் என கேட்பதாகவும் இதனால் பேச்சுவார்த்தை தடைபட்டது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென எல்கே சுதீஷ், ’எங்கள் முதல்வர் விஜயகாந்த் என்றும் எங்கள் சின்னம் முரசு’ என்றும் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தேமுதிக தனித்து போட்டி என்ற முடிவை எடுக்குமா என்ற கருத்து நிலவியது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சட்டப்பேரவைத் தேர்தல் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தேமுதிக துணைசெயலாளர் சுதீஷ் உடன், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தொலைபேசியில் பேசியதாகவும் இதனையடுத்து இன்று பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இன்றே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.


















