தமிழ்நாடு
பரவும் உருமாறிய கொரோனா; அலட்சியமா இருக்காதீங்க!- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

இந்தியாவின் பல மாநிலங்களில் உருமாறிய புது வகை கொரோனா கிடு கிடுவென பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் கொரோனா தொற்றுப் பரவல் விவகாரத்தில் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
கொரோனா தொற்றுப் பரவல் குறித்து தொடர்ந்து பல்வேறு மாவட்ட ஆட்சியளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும், ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதாவது கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 26 நுழைவுப் பாதைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் வெப்பநிலை சோதனையை வருவோர்க்கு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அதேபோல முக்கிய ரயில்வே நிலையங்களிலும் மற்ற மாநிலங்களில் இருந்து வருவோர்க்கு கொரோனா இருக்கிறதா என்பதைக் கண்டறிய சோதனைகளை முடுக்கி விட்டுள்ளோம்.
கொரோனாவைப் பொறுத்தவரை நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி விட்டு இருத்தல் உள்ளிட்ட விஷயங்களைச் செய்து வந்தால், மும்பை போன்று இங்கு மாறாமல் பார்த்துக் கொள்ளலாம். எனவே பொது மக்கள் அலட்சியமாக இருந்து விடக் கூடாது’ என்று கூறியுள்ளார்.


















