தமிழ்நாடு
ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தகர்க்கப் போவதாக இளைஞர் விடுத்த மிரட்டல்- பதறிய போலீஸ்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தகர்க்கப் போவதாக இளைஞர் ஒருவர் விடுத்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்துள்ளது தமிழக காவல் துறை.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த ஜனவரி மாதம், 27 ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நினைவிடம் சுமார் 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடம் சில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.

அந்த நினைவிடம் திறந்த அதே நாளில் சசிகலாவும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்தார். தற்போது தமிழகம் திரும்பியுள்ள சசிகலா, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று விடக் கூடாது என்னும் காரணத்தினால் அதை பராமரிப்புப் பணிக்காக மூடி வைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதைப் போன்றே ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலைய’ இல்லமும் மூடப்பட்டுள்ளது. இப்படி அரசியல் தளத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தகர்க்கப் போவதாக ஒரு மிரட்டல் வந்துள்ளது.

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த இளைஞர் ஒருவர், ‘எனக்கு மட்டும் அரசு வேலை கொடுக்கலைனா, மெரினாவுல இருக்கிற ஜெயலலிதாவோட நினைவிடத்த தகர்த்திடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறை, அந்த இளைஞரிடம் விசாரணை செய்து வருகிறது. குறிப்பாக அந்த இளைஞர் மன நலம் குன்றியவரா என்னும் கோணத்திலும் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.






















