சினிமா செய்திகள்
முடிந்தது ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் பிரச்னை… வெளியீட்டுத் தேதியைக் குறித்தது படக்குழு!

நடிகர் தனுஷ்-ன் ஜகமே தந்திரம் திரைப்பட வெளியீட்டில் நீடித்து வந்த பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ஜகமே தந்திரம். இந்தத் திரைப்படத்தின் வெளியீடு கொரோனா கட்டுப்பாடுகளால் தாமதம் ஆனது. 2020 மே மாதம் வெளியாவதாக இருந்த திரைப்படம் தற்போது 2021 மார்ச்-ல் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
![]()
ஆனால், திரை அரங்கங்களில் இல்லாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகும் என்ற செய்தி கடந்த ஒரு வாரமாகப் பரவத் தொடங்கியது. இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர் தனுஷும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுமே ஆதரவாக இல்லை. திரை அரங்கங்களில் 100 சதவிகித இட ஒதுக்கீடு அளித்த பின்னரும் இதுபோல் தயாரிப்புத் தரப்பு ஜகமே தந்திரம் படத்தை ஏன் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.
நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சசிகாந்துக்கும் இடையே இது தொடர்பாக பெரிய முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளரைத் தவிர அத்தனைத் தரப்பினரும் திரை அரங்க வெளியீடு கோரிக்கையைத் தீவிரப்படுத்த ஒரு வழியாக தியேட்டர் ரிலீஸுக்கு தயாரிப்பாளர் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரலில் அறிவிக்கப்பட்டால் ஜகமே தந்திரம் மே மாதம் வெளியாகும் என்றும் தேர்தல் மே மாதம் அறிவிக்கப்பட்டால் படம் மார்ச் மாதமே வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

















