இந்தியா
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

போர்ச்சுக்கல்லில் நடைபெற்ற மகளிருக்கான டபிள்யு 35 டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் கோவையைச் சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் சேவியா செர்வினோருயிஸை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
17 வயதான மாயாவுக்கு தொழில்முறை டென்னிஸில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இந்த போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மாயா படைத்தார்.
இதற்கு முன் இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா 2004ல் இந்த போட்டியில் 17 வயது 10 மாதங்களில் சாம்பியன் ஆனதே இதுவரை சாதனையாகத் தொடர்ந்தது. தற்போது மாயா 17 வயது 3 மாதங்களில் இந்த பட்டத்தை வென்று சானியாவின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
ராஜேஸ்வரன் – ரேவதி தம்பதியினரின் மகளான மாயா வெற்றி குறித்து பேசுகையில் இந்த சாம்பியன் பட்டம் அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை அளிக்கும். பெரிய போட்டிகளுக்குத் தகுதி பெறும் வகையில் ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று எனது தரவரிசையை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றார்.
ஜீனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்றுவரும் மாயா 10 வயதிலேயே தொழில்முறை டென்னிஸில் களமிறங்கினார். ஸ்பெயினில் உள்ள ரஃபேல் நடால் அகாடமியில் பயிற்சி எடுத்துள்ளார். தற்போது பிரான்சில் உள்ள எலைட் டென்னிஸ் சென்டரில் பயின்று வருகிறார்.


