உலகம்
நேபாளத்தில் சமூக வலைதள தடைக்கு எதிர்ப்பு – 16 பேர் உயிரிழப்பு, 250 பேர் காயம்!

காத்மண்டு:
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் நடத்தும் போராட்டங்கள் வன்முறையாக மாறி 16 பேர் உயிரிழந்ததுடன், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற உள்ளீடுகளை கண்காணிக்கவும் நேபாள உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ், லிங்க்ட்இன் போன்ற தளங்கள் ஏழு நாட்களுக்குள் பதிவுசெய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவை பதிவு செய்யாததால், தொலைத்தொடர்பு துறை உத்தரவின் பேரில் நேபாள தொலைத்தொடர்பு ஆணையம் சமூக வலைதளங்களை முடக்கியது.
இதற்கு எதிராக குறிப்பாக 2003ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஜென் இசட் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தடையை நீக்க வேண்டும், ஊழலை நிறுத்த வேண்டும் என கோரிய அவர்கள் பல்வேறு இடங்களில் தெருக்களில் போராட்டம் நடத்தினர். அரசு கூட்டம் கூடுவதற்கு தடை விதித்தும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
பார்லிமென்ட் வளாகம் உட்பட பல தடை செய்யப்பட்ட இடங்களிலும் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பாதுகாப்பிற்காக போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், போராட்டம் அடங்கவில்லை.
போராட்டக்காரர்கள் மரக்கட்டைகள், தண்ணீர் பாட்டில்கள் வீசியதுடன், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் வெடிகுண்டுகள், தண்ணீர் பீரங்கி, தடியடி என பல்வேறு முறைகளில் முயன்றனர். இந்த வன்முறையில் 16 பேர் உயிரிழந்ததுடன், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

















