வணிகம்
ஜூலை 2025 அகவிலைப்படி உயர்வு: 7வது ஊதியக்குழுவின் கடைசி திருத்தம் விரைவில் – ஊழியர்களுக்குக் குட் நியூஸ்!

ஜூலை 2025 அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அகவிலைப்படி உயர்வுக்கு இணையான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள CPI-IW (தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்) தரவுகள் அகவிலைப்படி உயர்வுக்கான வழியை காட்டுகின்றன.
ஜனவரி 2025 முதல் DA (அகவிலைப்படி) 55% ஆக உள்ளது. மார்ச் 2025 வரை வந்த CPI-IW தரவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட DA சதவீதம் 57.06% வரை உயர்ந்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாத CPI தரவுகள் நேர்மறையான போக்கில் தொடருமானால், ஜூலை 2025 இல் அகவிலைப்படி 58% வரை உயரலாம். இல்லையெனில், 57% ஆகவே நிலைக்க வாய்ப்பு உள்ளது.
2025 ஜூலை முதல் நடப்பில் வரும் இந்த அகவிலைப்படி உயர்வு, 7வது ஊதியக் குழுவின் கடைசி திருத்தமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அதன் காலம் டிசம்பர் 31, 2025-இல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு பொதுவாக ஜூலை மாத அகவிலைப்படி உயர்வை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அறிவிக்கும். அதன்படி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அகவிலைப்படி கணக்கீடு செய்யும் சூத்திரம்:
DA (%) = [(கடந்த 12 மாத CPI-IW சராசரி) – 261.42] ÷ 261.42 × 100
தற்போதைய நிலவரத்தில், DA 2% முதல் 3% வரை உயர வாய்ப்பு உள்ளது. இந்த உயர்வு, பணவீக்கத்திலிருந்து ஊழியர்களை பாதுகாக்கும் முக்கியத் துணையாக இருக்கும்.













