தமிழ்நாடு
அட்சய திருதியை நாளில் ரூ.9,000 கோடிக்கு தங்கம் விற்பனை: ஆச்சரிய தகவல்

நேற்றைய அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாகவும் இதன் மதிப்பு 9 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தகவல் வெளி வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் அமாவாசை தினத்திலிருந்து 3-வது நாள் அட்சய திருதியை நாள் என்று கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் விசேஷமாக இருக்கும் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது .
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி முதலே நகை கடைகள் திறந்து விட்டதாகவும் நள்ளிரவு 12 மணிவரை நகை கடையில் வியாபாரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரம் கிலோவுக்கு மேலாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 9,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நகை கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .
கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது இது 30 சதவீதம் அதிகம் என்றும் நகைக்கடை வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய அட்சய திருதியை நாளில் பணக்காரர்கள் மட்டுமின்றி ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களும் தங்கம் வாங்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் நகைக்கடைகளில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

















