ஆரோக்கியம்
ரத்த மூலம் ஆஸ்துமா குணமாக பிரண்டை

பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்ட கொடி வகையைச் சேர்ந்த பிரண்டை சாதாரணமாக வேலிகளில் படர்ந்து வளரும் தாவரமாகும். இது ஆண் பிரண்டை மற்றும் பெண் பிரண்டை என இருவகைப்படும். ஆண் பிரண்டையின் கனு 3 அங்குலமும் பெண் பிரண்டையின் கனு 1 அங்குலமும் இருக்கும். இவைகள் முக்கோண வடிவில் இருக்கும். இதன் வேறு பெயர்கள் வச்சிரவல்லி, கிரண்டை, அரிசணி எனப்படும். புக்கள் காய் பழங்கள் நிறைந்து காணப்படும். வேர் தண்டு பழம் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. காய்கள் காரத்தன்மையும் எரிப்புக் குணமும் கொண்டவை.
பிரண்டையில் அமைரின், அமிரோன் சிட்டோ சிரால், வைட்டமின் சி, கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. உடலிலிருந்து தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
பிரண்டையை இளம் தீயில் வதக்கி சாறு பிழிந்து 20 முதல் 30 மில்லி அளவு குடித்து வந்தால் பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு சீராகும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலி, முதுகுவலி போன்றவைகளுக்கு பிரண்டை உப்பு நல்ல தீர்வு கொடுக்கும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் 250 மில்லி கிராம் அளவுக்கு வெண்ணெயில் குழைத்து இருவேளை உட்கொண்டு வந்தால் சரியாகும்.
புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் ஒன்று.
ஆஸ்துமா நீங்கும். பசியைத் தூண்டும். குடல் கிருமிகளை அழிக்கும். மலமிளக்கும். கொழுப்பைக் குறைக்கும். சுளுக்கு நீங்கும். வயிற்று வலி போக்கும். ரத்த மூலம் சரியாகும்.
பிரண்டையை நெய்யில் வதக்கி துவையலாகச் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். ரத்த ஓட்டம் சீராகி இதயம் வலுப்பெறும்.
வாயுத் தொல்லையைக் கட்டுப்படுத்தும். இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி பொடித்து அதனுடன் சிறிதளவு வெந்நீர் கலந்து மாவு பதம் வந்ததும் இடுப்பு, கழுத்து முதுகுப்பகுதிகளில் பற்று போட்டால் முறுக்கிய பகுதிகள் இளகி வலி குணமாகும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். பிரண்டைத் தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. பிரண்டை வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.
ஈறுகளில் ரத்தக் கசிவை நிறுத்தும். சுவையின்மையை விலக்கும். உதடு வெடிப்பு, வாய்ப்புண், வாய்நாற்றம் இவற்றுக்கு பிரண்டைப் பொடியை 2 கிராம் வெண்ணெயில் குழைத்து 3 நாட்களுக்கு 2 வேளை வீதம் சாப்பிடலாம். பிரண்டைப்பொடி செரிமானக் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகிறது.
களிப்பரண்டையால் கரப்பான், சிலந்திக்கடி, பித்தம் தீரும்.
தீப்பிரண்டையால் இரைப்பு, வீக்கம், சீதக்கட்டு, செரியாமந்தம், வாதம், விக்கல் நீங்கும்.
புளிப்பிரண்டையால் கபம், குன்மம், பாண்டு, மார்புநோய் போகும். உடல்சூடு உண்டாகும்.
இவ்வளவு எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட இந்த பிரண்டையை நீங்களும் உங்கள் வீட்டிலுயே வளர்த்து பலன்களைப் பெற்று நீண்ட காலம் வாழலாமே.










