சினிமா
என் மூஞ்சி ஜோக்கர் மூஞ்சி; எப்பவும் நான் காமெடியன் தான் – யோகி பாபு உருக்கமான பேச்சு!

காமெடியனாகவும் கதையின் நாயகனாகவும் கலக்கி வரும் யோகி பாபு, அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொம்மை நாயகி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் அரசியல் எந்த அளவுக்கு புயலாக அடித்து மாற்றுகிறது என்கிற கதையை இயக்குநர் படமாக மாற்றி உள்ளார். கடலூர் கடற்கரையோர பகுதிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி, யோகி பாபுவுக்கு மகளாக நடித்துள்ளார். இப்படத்தில் ‘வட சென்னை’, ‘கபாலி’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான சுபத்ராவும், ‘மெட்ராஸ்’ புகழ் ஹரி கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

#image_title
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பரியேறும் பெருமாள், மண்டேலா உள்ளிட்ட படங்களில் தான் ஒரு சிறந்த நடிகன் என வெளிப்படுத்திய யோகி பாபு இன்னொரு முறை பெரிய அளவில் தனது நடிப்புத் தன்மையை அரங்கேற்ற பொம்மை நாயகி பெரிய ஸ்பேஸ் கொடுத்திருக்கிறது.
இன்று நடைபெற்ற பொம்மை நாயகி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய யோகி பாபு, எல்லா மேடைகளிலும் என்னை நான் காமெடியன் என சொல்வதற்கு காரணம் அதுதான் என் தொழில். காமெடியன் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் தெருத்தெருவாக வாய்ப்பு தேடி அலைந்தேன்.

#image_title
பலரும் என் முகத்தை கிண்டல் செய்துள்ளனர். மேக்கப் போடும்போது திட்டியுள்ளனர். இதெல்லாம் எல்லா நடிகர்களுக்கும் நடப்பதுதான். எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்துள்ளது. எப்பவும் என் முகம் ஜோக்கர் முகம்தான். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த சினிமாவுக்கு சென்றாலும் நான் காமெடியன்தான் என்று குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கானின் பதான் படத்திலும் யோகி பாபு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சூர்யா 42 படத்திலும் நடித்து வருகிறார் யோகி பாபு.