கிரிக்கெட்
விஜய் சங்கர், மில்லர் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 39வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் மற்றும் ரஹமதுல்லா குர்பாஸ் களமிறங்கினர்.
குர்பாஸ் அதிரடி அரைசதம்
ஜெகதீசன் 19 ரன்களும், அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். வெங்கடேஷ் 11 ரன்னிலும், கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். குர்பாஸ் மட்டும் நிலைத்து நின்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் 81 ரன்கள் குவித்து அவுட் ஆனார் குராப்ஸ். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரசல் 34 ரன்கள் குவித்து அவுட் ஆனார். முடிவில் கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. குஜராத் தரப்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குஜராத் வெற்றி
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் தொடக்க வீரர்களாக சகா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். சகா 10 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். நிதானமாக ஆடிய சுப்மன் கில் 49 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி, குஜராத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். விஜய் சங்கர் அரைசதம் அடிக்க இறுதியில் குஜராத் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.