கிரிக்கெட்
9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது ஐதராபாத்!

16வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். அகர்வால் 5 ரன்னில் வெளியேற, அடுத்துவந்த ராகுல் திரிபாதி 10 ரன்னிலும், கேப்டன் மார்க்ரம் 8 ரன்னிலும், ஹேரி ப்ரூக் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஐதராபாத் 197 ரன்கள்
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கால்சன் 53 ரன்களும், சமாத் 28 ரன்களும் குவித்தனர். முடிவில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது. டெல்லி அணித் தரப்பில் மிச்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐதராபாத் வெற்றி
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் கேப்டன் டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக சால்டுடன், மிட்செல் மார்ஸ் ஜோடி சேர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சால்ட் 59 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஸ் 63 ரன்களில் கேட்ச் ஆனார்.
அடுத்து களமிறங்கிய பிரியம் கார்க் 12 ரன்களும், சர்ப்ராஸ் கான் 9 ரன்களும் எடுத்து போல்ட் ஆகினர். இறுதியில் ரிப்பல் பட்டேல் 11 ரன்களும், அக்சர் பட்டேல் 29 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க்கண்டே 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ஹூசைன், நடராஜன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.