தமிழ்நாடு
விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம்: குஷியில் ரசிகர்கள்!

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்கு பொதுசின்னமாக ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தாலும் பெரும்பாலான விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் என்ற முறையில் ஆட்டோ சின்னத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத விஜய் மக்கள் இயக்கத்திற்கு பொது சின்னம் வழங்க முடியாது என்றும் சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி இருந்தனர். இருப்பினும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்படும் சின்னத்தில் ஆட்டோ சின்னம் இருந்ததால் பெரும்பாலான விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் ஆட்டோ சின்னத்தை கோரி கேட்டு கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு பல வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உற்சாகத்துடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்களுக்கு மட்டும் உலக உருண்டை, குடை போன்ற சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


















