தமிழ்நாடு
திருப்பூர் வரும் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும்: வைகோ அதிரடி அறிவிப்பு!

பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி திருப்பூருக்கும், 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி எப்பொழுது தமிழகம் வந்தாலும் அவருக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு மதுரை வந்திருந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் பேருந்து நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பைத் தெரிவித்தார் வைகோ.
இந்நிலையில் திருப்பூர், கன்னியாகுமரி என மீண்டும் தமிழகம் வர உள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், பசு பாதுகாப்பு எனும் பெயரால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தி திணிப்பு, அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தோர் நியமனம், திட்டக்குழு கலைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் மூலம் மாநில உரிமைகள் பறிப்பு, அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் மத்திய அமைப்புகளின் சீர்குலைவு போன்றவை நாடு பாசிசத்தின் கோரப் பிடியில் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகிறது.
மோடி அரசின் செயல்பாடுகளால் தமிழகம் எல்லா வகையிலும் வஞ்சிக்கப்பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது. பாஜக. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருவது அவரது உரிமை. ஆனால் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்து வரும் பிரதமர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.
அதன்படி பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கும், பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தந்து அரசு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.









