தமிழ்நாடு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஊடகங்களின் சொதப்பல்!

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து பிரபல ஊடகங்கள் அனைத்தும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட ஆரம்பித்தன. அனைத்து ஊடகங்களும் சொல்லி வைத்தார் போல பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணித்தனர்.
ஆனால் இந்த கருத்துக்கணிப்புக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த கருத்து கணிப்புகளில் இந்திய அளவில் முக்கியமான ஊடகங்கள் கூட பெருந்தவறுகளை இழைத்துள்ளன. அதன் சொதப்பல்கள் சமூக வலை தளங்களில் விமர்சிக்கப்படுகின்றன.
குறிப்பாக தமிழகத்தில் தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3% முதல் 6% வரை வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளரே போட்டியிடவில்லை. தனித் தொகுதியில் வேட்பு மனு செய்பவர் தனது வேட்பு மனுவுடன் சாதிச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஆனால் மநீம வேட்பாளர் ஜாதி சான்றிதழ் இணைக்காததால் வேட்பு மனு பரிசீலனையின் போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. இதனை அறியாமல் தந்தி தொலைக்காட்சியில் மக்கள் நீதி மய்யம் 3 முதல் 6% வரை ஓட்டு வாங்கும் என்று கூறியுள்ளது.
இதேப்போல, டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் வெளியிட்ட வாக்குக் கணிப்பில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி 2.9% வாக்குகளைப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் உத்தரகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களை களமிறக்கவே இல்லை. ஊடகங்களின் இந்த சொதப்பலால் எக்சிட் போல் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.
















