தமிழ்நாடு
திமுக தேர்தல் அறிக்கை: சிமானின் பன்ச்!

தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. திமுக வெளியிட்ட சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை பல்வேறு தரப்பினர் வரவேற்றும், எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக அறிக்கையை விமர்சனம் செய்துள்ளார்.

அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ஈழத் தமிழர்கள் விஷயம் குறித்தெல்லாம் பேசுகிறது திமுக அறிக்கை. ஆனால், இவர்கள் தான், ஈழ இனப் படுகொலை நடக்கும் போது, மத்திய அரசில் அங்கம் வகித்தார்கள். அப்படிப் பார்த்தால் அந்தப் படுகொலைக்கே இவர்கள் தான் காரணமாவார்கள். அப்படி இருக்கையில் இப்போது மட்டும் ஏன் இப்படியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை வெறும் வெற்று அறிக்கை. அதனால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இருக்காது’ என்றார்.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையில், திருக்குறள் தேசிய நூலாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது குறித்து சீமான், ‘மத்திய அரசில் தொடர்ந்து 18 ஆண்டுகள் அங்கம் வகித்தக் கட்சி என்றால் அது திமுக தான். அப்படி இருந்த திமுக, திருக்குறளை அப்போதே தேசிய அளவில் கொண்டு சென்றிருக்கலாம் அல்லவா. அவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை. மேலும் திருக்குறள் என்பது உலகப் பொது மறை. அதை திமுக முதலில் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.























