கிரிக்கெட்
தோனியின் ஓய்வு: சச்சின் டெண்டுல்கர் அதிரடி கருத்து!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக வலம் வந்த தோனி இந்திய அணிக்கு அவரது தலைமையில் உலக கோப்பையை வென்று கொடுத்ததுமட்டுமல்லாமல் பல்வேறு தொடர்களை வென்று கொடுத்து வெற்றி கேப்டனாக வலம் வந்தார். இந்நிலையில் 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த தோனி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் தொடர்ந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து அவர் மோசமான ஃபார்மில் உள்ளதால் அவர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வரத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை என்னிடம் இல்லை. தேர்வுக் குழுவினர் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்துகொள்வதற்கு முன்பு நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றார்.
மேலும் தோனி அனைத்து விதமான கிரிக்கெட்டுக்கும் ஏற்ற நபர் என்பதை மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியைப் பொறுப்புடன் வழிநடத்தியுள்ளார். அதனால் இந்த ஓய்வு முடிவு அவரிடமே உள்ளது. நீண்ட நாள் அணிக்காக விளையாடிய ஒருவருக்கு அணியிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். எனவே அவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் சச்சின்.























