சினிமா
ருத்ரன் விமர்சனம்: எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

மாஸ் மசாலா படங்களை ரஜினிகாந்த், விஜய் நடித்தாலே ஓடாமல் அட்டு ஃபிளாப் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், இப்படியொரு படத்தை அதுவும் அந்த காஞ்சனா 3 மகா காவியத்திற்கு பிறகு கொடுத்து மீண்டும் மொக்கை வாங்கியிருக்கிறாரே ராகவா லாரன்ஸ் என்று தான் படத்தை பார்த்ததும் பலரது மைண்ட் வாய்ஸ் சத்தமாக பேசியது.
தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநராக ஆசைப்பட்டது எல்லாம் நல்ல ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால், தனது பணத்தை தானே இப்படி கரியாக்குவேன் என அடம்பிடிப்பது எந்த வகையிலும் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உகந்தது அல்ல.

#image_title
தமிழ் புத்தாண்டுக்கு எந்தவொரு படமும் உருப்படியாக வரவில்லையே என நினைத்தது சரியாகவே அமைந்தது விட்டது. இன்று வெளியாகி உள்ள பல படங்களின் ரிப்போர்ட்டுகள் அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன. இந்நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
அம்மா, அப்பா பேச்சைக் கேட்டு அவர்களுடன் சந்தோஷமான வாழ்க்கையை எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என வாழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அவருக்கு அப்பாவாக நாசர், அம்மாவாக பூர்ணிமா பாக்கியராஜ் நடித்துள்ளனர்.
பிரியா பவானி சங்கரை பார்த்ததும் பிடித்துப் போக பெற்றோரிடம் சொல்கிறார். திருமணத்தையும் செய்து வைக்கின்றனர்.

#image_title
இதற்கிடையே நண்பனை நம்பி பல கோடிகள் கடன் வாங்கி மோசம் போகிறார் நாசர். அவரது மரணத்துக்கும் கடன் பிரச்சனையே காரணமாக அமைகிறது. அப்பாவின் கடனை அடைக்க வெளிநாட்டுக்கு குடும்பத்தையும் புதிதாக திருமணம் செய்துக் கொண்ட மனைவியையும் விட்டு விட்டுச் செல்கிறார் ருத்ரன்.
கை நிறைய சம்பாதித்து விட்டு திரும்பி வந்து கடனை அடைத்து சந்தோஷமாக வாழலாம் என நினைக்கும் ராகவா லாரன்ஸுக்கு அவரது வாழ்வில் பெரும் புயலே அடித்து விடுகிறது. அதற்கு காரணமான வில்லன் சரத்குமாரை எப்படியெல்லாம் பழி வாங்குகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

#image_title
வில்லனாக சரத்குமார் மிரட்டி எடுத்திருக்கிறார். மூத்த நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக கொடுத்த வேலையை செய்து கொடுத்து இருக்கின்றனர். ராகவா லாரன்ஸ், ஆடுகிறார், பாடுகிறார், காமெடி பண்ணுகிறார். சண்டை போடுகிறார். ஆனால், எதுவுமே ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
இந்த சீன் காஞ்சனாவில் பார்த்தது போலவே இருக்கே, இது அந்த படத்தில் வந்தது போல இருக்கே என்று தான் பழைய காட்சிகளை திரையில் பார்க்க பார்க்க பட்டியல் போடுவது போல இருக்கிறது.
சண்டைக் காட்சிகள் ஹீரோவை மாஸாக காட்டத்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அதிலும் ஒரு நியாயம் வேண்டாமப்பா? தெலுங்கு படங்களை எல்லாம் தெறிக்க விடுறோம் பாரு என டிசைன் டிசைனாக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைப் போடுவதெல்லாம் ரசிக்கும் படியாக இல்லை.
பெத்தவங்களை குழந்தைங்க தவிக்க விடக் கூடாது என்கிற மெசேஜ் நல்லா இருந்தாலும், அந்த ஒரே ஒரு கருத்துக்காக ஒட்டுமொத்த சூர மொக்கையை கொண்டாட முடியாது. ருத்ரன் – மண்டை பத்திரம்!
ரேட்டிங்: 2/5.