செய்திகள்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்! 2.25 கோடி ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டம்!

Pongal Gift | பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசு, வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் நேரடியாக பயன் பெற உள்ளனர்.
விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமை தொகை திட்டம் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், இதுவரை வழங்கப்படாமல் இருந்த பொங்கல் ரொக்கத் தொகையை இந்த முறை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கிய பின், பொங்கல் பரிசு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு வழங்குவது நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. அதிமுக ஆட்சியில், 2021ஆம் ஆண்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 ரொக்கம் வழங்கப்பட்டது. இதுவே இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச ரொக்கம் ஆகும்.
திமுக ஆட்சியில், அதனைத் தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரொக்கம் வழங்கப்படாமல், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், இதுவரை வழங்கப்படாத ரொக்கத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படுவதால் ஏற்பட்ட நிதிச் சுமை காரணமாக, ரூ.3000 ரொக்கம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரொக்கம் வழங்கப்பட உள்ளதால், பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும், ஜனவரி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், விரைவில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.










