ஆரோக்கியம்
உலகிலேயே இந்தியாவுக்கு 3ம் இடம் – எதில் தெரியுமா? – எச்சரிக்கை

உடல் பருமன் அதாவது குண்டாக இருப்பவர்கள் எண்ணிக்கையில்தான் இந்தியா உலகிலேயே மூன்றாவது இடத்தில் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதாம்.
2050 ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 450 மில்லியனை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் பெரும்பாலானோர் அதிக எடை கொணடவர்களாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் பருமனுக்கு முக்கிய சிகிச்சையே நமது உணவு உண்ணும் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதேயாகும்.
நமது முன்னோர்கள் பசித்துப் புசி என்பார்கள். பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவு நேரம் என்பதால் மட்டுமே பசி இல்லாவிட்டாலும் சாப்பிடும் பழக்கம் நம்மில் பெரும்பான்மையோரிடம் உள்ளது. அது தவறு.
சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, போதுமான துாக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்தால் உடல்பருமனிலிருந்து விடுபட முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
சிறு வயதிலிருந்தே சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.
காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள். உடற்பயிற்சி ஒவ்வொரு நாளும் அவசியம்.
குழந்தைகள் அதிகமாக மொபைல் போன்கள் மற்றும் டிவிகளைப் பயன்படுத்துவதும் மைதானத்தில் விளையாடுவது குறைவதும் உடல் பருமனுக்குக் காரணமாகின்றன. ஐடி ஊழியர்களில் பெரும்பாலானோர் உடல் பருமன் கொண்டவர்களாக மாறி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சினை நமக்கு எச்சரிக்கை மணி அடிப்பதை நாம் உணர வேண்டும்.
அதிக எடை கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இதயநோய்கள், கொழுப்பு, கல்லீரல், மன நோய்கள், பெண்களுக்கு கர்ப்ப கால பிரச்னைகள் என பல்வேறு பாதிப்புகள் உடல் பருமனால் ஏற்பட வாய்ப்புண்டு.
வாரத்தில் ஒரு நாள் ஒரு வேளை உணவினை நிறுத்தி உண்ணாவிரதம் இருப்பதும் உடல் நலத்திற்கு நல்லது.
உடல் பருமனுக்கு டாட்டா சொல்ல உங்களுடைய முயற்சியை இன்றே தொடங்குங்கள்.


















