உலகம்
திருப்தி அடையாத எலான் மஸ்க்.. மீண்டும் 200 டுவிட்டர் ஊழியர்கள் பணிநீக்கம்..!

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து சுமார் 60% ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் திருப்தி அடையாத அவர் மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டுவிட்டர் நிறுவனம் தற்போது மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அதை மீட்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் எனவே செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்க வேலை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்றும் டுவிட்டர் நிறுவனத்தின் செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் சுமார் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சில ஊழியர்கள் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை மின்னஞ்சல் மூலம் அறிந்தார்கள் என்றும் சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதே தெரியாமல் அலுவலகத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் அலுவலகத்தின் உள்ளே நுழைய முடியாத வகையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த முறை பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சமீபத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. டுவிட்டர் நிறுவனம் தனது உள் அமைப்பை தொடர்ந்து சீர்படுத்த முயற்சி செய்கிறது என்றும் ஏற்கனவே பல்வேறு சலுகைகளை ஊழியர்களுக்கு நிறுத்திய நிலையில் தற்போது மீண்டும் 10% ஊழியர்களின் பணி நீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டுவிட்டர் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்பட சுமார் 3,200 ஊழியர்கள் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் நிறுவனம் செலவை கட்டுப்படுத்துவதற்காக இன்னும் எந்த ரிஸ்கையும் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.