கிரிக்கெட்
ஐதராபாத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது மும்பை!

16 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 25வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
மும்பை 192 ரன்கள் குவிப்பு
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 28 ரன்களில் ஆட்டம் இழக்க, கேமரூன் கிரீன் களம் இறங்கினார். இஷான் கிஷன் 38 ரன்கள், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த திலக் வர்மா 17 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிரீன் அரைசதம் அடித்து 64 (40) ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.
மும்பை ஹாட்ரிக் வெற்றி
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதராபாத அணி களமிறங்கியது. ஹேரி புரூக் 9 ரன்களில் அவுட் ஆக, ராகுல் திரிபாதி 7 ரன்னும், கேப்டன் மார்க்ரம் 22 ரன்களும், அபிஷேக் சர்மா 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 36 (16) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
மந்தமாக ஆடிய மயங்க் அகர்வால் 48 ரன்களில் வெளியேறினார். பின்னர் மார்கோ ஜான்சென் 13 ரன்களும் , வாஷிங்க்டன் சுந்தர் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, 19.5 ஓவர்கள் விக்கெட் 10 இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது.