தமிழ்நாடு
ஆக்ஸிஜன் சப்ளையில் நெருக்கடி: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய கடிதம்!

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சுவாசம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது. கொரோனா வைரஸ், நுரையீரல் பகுதியைத் தான் அதிகம் தாக்குகிறது என்பதால் முறையாக சுவாசிப்பது என்பது குறைந்து, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடுகிறது.
இதனால் செயற்கையாக ப்யூர் ஆக்ஸிஜன் என்பது மிகவும் அவசியமாகிறது. தற்போது பல வட மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து, முறையாக ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் பலர் தினம் தினம் இறந்து வருகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் 13 பேர் இறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி கொரோனாவால் செயற்கை ஆக்ஸிஜன் மிகவும் அவசியமாக இருக்கும் சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில் ஸ்டாலின், ‘தமிழகத்தில் மருத்துவ ரீதியிலான ஆக்ஸிஜன் சப்ளை என்பது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஒரு நாளில் தமிழகத்தில் 440 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இன்னும் இரண்டே வாரத்தில் இந்த அளவு மேலும் 400 மெட்ரிக் டன் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மட்டுமே வழ்ங்க முன் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடந்து ஆலோசனைகளை அடுத்து, 476 மெட்ரிக் டன் அளவுக்கு தமிழகத்துக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதாக சம்மதிக்கப்பட்டது. இதற்கு உண்டான உரிய ஆணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் பல குழப்பங்கள் எழுந்துள்ளன.
எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு முறையான புதிய ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.









