இந்தியா
தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். பிரதமர் மோடி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். சிக்பள்ளாப்பூரில் இருக்கும் மறைந்த பொறியாளர் சர்.எம்.விசுவேஸ்வரய்யா நினைவிடத்திற்கு சென்று, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முத்தேனஹள்ளியில் உள்ள மதுசூதன் சாய் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார்.
தாய்மொழி கல்வி
பிரதமர் மோடி பேசுகையில், நம் நாட்டின் பெருமையை அதிகரிக்கும் மொழிகளில் ஒன்று கன்னடமாகும். நமது நாட்டை ஆண்ட முந்தைய அரசுகள் மருத்துவம் மற்றும் தொழில் படிப்புகளை கன்னடத்தில் கற்க வழிவகை செய்யவில்லை. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆவதனை இந்த அரசியல் கட்சிகள் விரும்பவில்லை.
ஏழைகளுக்காக உழைக்கும் பாஜக தலைமையிலான அரசு கன்னடம் உள்ளிட்ட பிராந்திய தாய்மொழிகளில் மருத்துவம் மற்றும் தொழில் படிப்புகளை படிக்க பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். ஏழை மக்ககளை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் அரசியல், நம் நாட்டில் நீண்ட காலமாக நிலைத்திருந்தது. அதனை மாற்றிய பா.ஜ.க. அரசு நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மருத்துவ கல்லூரிகள்
நாட்டில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக 300-க்கும் குறைவான மருத்துவ கல்லூரிகளே இருந்தன. இப்போது இந்தியா முழுவதும் 650 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதனுடன் புதியதாக 150 நர்சிங் கல்லூரிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை எத்தனை மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்களோ, அதில் இருந்து இரு மடங்கு மருத்துவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்படுவார்கள் என மோடி தெரிவித்தார். In