கிரிக்கெட்
பெங்களூரை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது கொல்கத்தா!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது.
கொல்கத்தா 200 ரன்கள்
ஜேசன் ராய் மற்றும் ஜெகதீசன் இருவரும் கொல்கத்தா இன்னிங்சை தொடங்கி வைத்தனர். அதிரடியாக விளையாடிய ராய் 22 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். ராய் – ஜெகதீசன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்தது. ஜெகதீசன் 27 ரன், ராய் 56 ரன் விளாசி வைஷாக் வீசிய 10வது ஓவரில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனையடுத்து, வெங்கடேஷ் – கேப்டன் நிதிஷ் ராணா இணைந்து ஆர்சிபி பந்துவீச்சை பதம் பார்க்க, கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இருவரும் 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 80 ரன்களைச் சேர்த்தனர். ராணா 48 ரன்கள், வெங்கடேஷ் 31 ரன்கள் எடுத்து ஹசரங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். கொல்கத்தா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. ரிங்கு 18 ரன் மற்றும் டிம் டேவிட் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் வைஷாக், ஹசரங்கா தலா 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
கொல்கத்தா அணி வெற்றி
அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக கோஹ்லி 54 ரன், லோம்ரோர் 34 ரன், தினேஷ் கார்த்திக் 22 ரன்களை எடுத்தனர். கொல்கத்தா பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி 3, ரஸ்ஸல், சுயேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளை
வீழ்த்தினர்.