ஆரோக்கியம்
கண்களை அடிக்கடி கசக்குவது ஆபத்தானதா? மருத்துவர்கள் எச்சரிக்கும் காரணங்கள்!

கண்கள் மனித உடலின் மிக உணர்திறன் கொண்ட உறுப்புகளில் ஒன்றாகும். சிறிய தூசி விழுந்தாலும் உடனே துடித்துப் போகும். இதனால் பலர் தன்னிச்சையாக கண்களை கசக்கும் பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி, கண்களை அடிக்கடி தேய்ப்பது பார்வைக்கு மிக ஆபத்தான பாதிப்புகளை உண்டாக்கும்.
கண்களை கசக்கக் காரணங்கள்
தலையில் இருக்கும் பொடுகு அல்லது பேன், கண்களில் விழும்போது அரிப்பு ஏற்படலாம்.
குழந்தைகள் அழுக்கான கைகளால் கண்களை கசக்கினால் தொற்று பரவும் அபாயம் அதிகம்.
சிலர் பழக்கமாகவே கண்களை தேய்ப்பார்கள். இது குளுக்கோமா, கார்னியா பலவீனம், விழித்திரை பாதிப்பு போன்ற கண் நோய்களை மோசமாக்கும்.
கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வாமையால் அரிப்பு ஏற்படலாம். தேய்ப்பதால் வாகஸ் நரம்பு தூண்டப்பட்டு தற்காலிக சுகம் கிடைத்தாலும், நீண்ட காலத்தில் இது பார்வைக்கு சேதம் தரும்.
கண்களில் ஏற்படும் பாதிப்புகள்
கீறல்கள்: தூசி அல்லது துரும்பு விழுந்தபோது தேய்த்தால் கார்னியாவில் கீறல்கள் உண்டாகும். இது புண் மற்றும் தொற்றாக மாறக்கூடும்.
கெரடோகோனஸ்: அடிக்கடி தேய்ப்பதால் கார்னியா மெல்லியதாகி கூம்பு வடிவம் எடுக்கும்.
கிட்டப்பார்வை மோசமாதல்: ஏற்கனவே கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பார்வை மேலும் பாதிக்கும்.
இரத்தக் கசிவு: கண்களை தேய்ப்பதால் சிறிய இரத்த நாளங்கள் சேதமடைந்து கண்களுக்குள் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
கருப்பு வட்டங்கள்: அடிக்கடி கசக்குவதால் கண் சுற்றி கருப்பு வட்டங்கள் தோன்றும்.
கண்களை கசக்காமல் இருக்க டிப்ஸ்
கண்களில் தூசி விழுந்தால் கசக்காமல், சுத்தமான தண்ணீரால் கண்களை கழுவவும்.
தலையில் பொடுகு இருந்தால் உடனே சிகிச்சை எடுக்கவும்.
நீண்ட நேரம் கணினி பயன்படுத்தினால் இடைவெளி எடுத்து கண்களுக்கு ஓய்வு கொடுக்கவும்.
அரிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் ஆண்டிபயாட்டிக் சொட்டு மருந்து பயன்படுத்தவும்.
காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அவற்றை சுத்தமாக பராமரிக்கவும்.
குழந்தைகள் கண்களை கசக்காமல் கவனிக்கவும்.
சூரியஒளியில் செல்லும் போது சன் கிளாஸ் அணியவும்.
கண்வலி அல்லது தொற்று உள்ளவர்களிடம் மிக அருகில் பழக வேண்டாம்.











