சினிமா
சிவகார்த்திகேயன்: நான் ரஜினியின் பாதிப்புதான்!

நடிகர் ரஜினிகாந்தின் பாதிப்பு தனக்கு அதிகம் உள்ளது என நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ரேவதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்க கூடிய ‘ஆகஸ்ட் 16, 1947’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்தார்.
அப்பொழுது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். “‘மாவீரன்’ படப்பிடிப்பில் என்னுடைய போர்ஷன் இன்று தான் முடிவடைந்தது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்புமே முடிந்துவிடும். இந்த வருட இறுதிக்குள் இந்த படம் நிச்சயம் வெளியாகும். அதை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிப்பார்கள். இந்த படத்தை அடுத்து கமல் சார் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் படம் நடிக்க இருக்கிறேன். ஏ ஆர் முருகதாஸ் சார் படத்திற்கு, நான் தொகுப்பாளராக இருந்த பொழுது இசை வெளியீட்டு விழாவிற்கெல்லாம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதன் பிறகு அவரது தயாரிப்பிலேயே ‘மான் கராத்தே’ படமும் நடித்திருக்கிறேன்.
இப்பொழுது அடுத்த கட்டமும் விரைவில் நடைபெறும்” என ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதை இந்த மேடையில் சிவகார்த்திகேயன் உறுதி செய்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் தலைப்பான ‘மாவீரன்’ வைத்துள்ளது குறித்து கேட்ட பொழுது, “அதை படக்குழு தெளிவுபடுத்தும். ஆனால், நிறைய பேர் என்னிடம் ரஜினிகாந்தின் சாயலில் நான் பல விஷயங்கள் செய்வதாகக் கேட்கிறார்கள்.
நான் மிமிக்ரி செய்து கொண்டிருந்த காலத்தில் எல்லாம் அதிகமாக ரஜினி சாரை தான் அதிகம் இமிடேட் செய்வேன். இமிடேட் என்பதையும் தாண்டி அவருடைய பாதிப்பு எனக்கு இருக்கிறது. இயல்பாகவே என்னிடம் அது வந்துவிடும். அவருடைய மிகப் பெரிய ரசிகன் நான். அவரைப் போலவே நான் செய்கிறேன் என்பது எனக்கு சந்தோஷம்தான்” என கூறியிருக்கிறார்.