கிரிக்கெட்
ஹாரி ப்ரூக் அதிரடி சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி!

16 வது ஐபிஎல் தொடரின் 19 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் தொடக்க வீரர்களாக ஹாரி ப்ரூக் மற்றும் மயங்க அகர்வால் ஆகிய இருவரும் களம் கண்டனர்.
ஹாரி ப்ரூக் சதம் விளாசல்
ஹாரி ப்ரூக் ஒரு புறம் அதிரடியில் மிரட்டி சதம் விளாச, அகர்வால் 9 ரன்னும், அடுத்த வந்த திரிபாதி 9 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். மார்கரம் அரைசதம் அடித்து அவுட் ஆக, அடுத்து வந்த அபிஷேக் சர்மா 32 ரன்களில் அவுட் ஆனார். ப்ரூக் 55 பந்தில் அதிரடி சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இது தான். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் ரன் எதுவும் எடுக்காமலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்னிலும், அடுத்து வந்த சுனில் நரைன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெகதீசன் 21 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரசல் 3 ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் கேப்டன் ரானாவுடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார். கேப்டன் நிதிஷ் ராணா 41 பந்தில் 75 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆக, ஷர்துல் தாகூர் 12 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரையில் போராடிய ரிங்கு சிங் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
ஐதராபாத் வெற்றி
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் கொல்கத்தாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றிபெற்றது.